என்னுடைய மகன் அசாம் கான் அணியிலிருந்து நீக்கப்பட அவர்தான் காரணம் - பாக்.முன்னாள் வீரர்
|தன்னுடைய மகன் அசாம் கான் அணியிலிருந்து நீக்கப்பட ரமீஸ் ராஜாதான் காரணம் என்று மொயின் கான் விமர்சித்துள்ளார்.
லாகூர்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மொயின் கான் அந்த அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர். அவருடைய மகன் அசாம் கான் கடந்த 2021-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 14 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இதுவரை அவரிடம் இருந்து பெரிய ஆட்டம் வரவில்லை என்பதனால் அவர் அணியிலிருந்தும் தற்போது கழட்டிவிடப்பட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிரடியான பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்டாலும் கூடுதல் உடல் எடையுடன் இருப்பதனால் அவரது உடற்தகுதி பலரது மத்தியிலும் விமர்சிக்கப்பட்டு வந்தது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின்போது அவர் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.
இருப்பினும் ஒரே போட்டியில் விளையாடிய அவர் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்ததால் அந்த போட்டியோடு ஓரங்கட்டப்பட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு அந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தன்னுடைய மகன் அசாம் கான் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்படவும், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும் ரமீஸ் ராஜாதான் என்று மொயின் கான் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உலகக்கோப்பை தொடருக்கான அணியில் எனது மகன் தேர்வு செய்யப்பட்டார். அந்த நேரத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய பின்னர் அவரை நீக்கிவிட்டனர். உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்ற போதும் சரி அதற்கு முன்னதாக பயிற்சி போட்டிகளிலும் சரி அசாம் கான் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். இருப்பினும் ஒரே போட்டியில் அவர் ஒரு பந்தில் ஆட்டமிழந்ததால் அவரை ரமீஸ் ராஜாதான் நீக்கி உள்ளார்.
அணியின் நிர்வாகம் மீதும் கேப்டன் மீதும் நான் எந்த வித குற்றச்சாட்டையும் சொல்ல மாட்டேன். அசாம் கான் மீதும் தவறு உள்ளது. அவர் உடல் அளவிலும் மனதளவிலும் வலிமை பெற வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் பிட்னசில் முன்னேற்றம் காண கவனம் செலுத்துவார். தற்போது அவர் படிப்படியாக பிட்னசில் முன்னேற்றம் கண்டு வருவதை நானும் உணர்கிறேன்" என்று கூறினார்.