வங்காளதேச அணிக்கு நான் பீல்டிங் செட் செய்ய அவர்தான் காரணம் - ரிஷப் பண்ட்
|இந்தியா-வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டியில் 280 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை,
இந்தியா-வங்காளதேசம் இடையிலான சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா 376/10 (முதல் இன்னிங்ஸ்) மற்றும் 287/4 (2வது இன்னிங்ஸ்) ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி 149/10 (முதல் இன்னிங்ஸ்) மற்றும் 234/10 (2வது இன்னிங்ஸ்) எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் 2வது இன்னிங்ஸின் போது டிரிங்ஸ் பிரேக்கிற்கு பின் வங்காளதேச அணியின் கேப்டன் சாண்டோ பீல்டிங் செட் செய்து கொண்டிருந்தார். அப்போது கவர்ஸ் திசையில் எந்த பீல்டரும் இல்லாமல் இருப்பதை கவனித்த ரிஷப் பண்ட், உடனடியாக வங்காளதேச கேப்டன் சாண்டோவை அழைத்து இந்தப் பக்கம் கொஞ்சம் பாருங்க.. ஒரு பீல்டரை நிறுத்தலாம் என்று கூறினார். இதனை சிரித்து கொண்டே ஏற்றுக் கொண்ட சாண்டோ உடனடியாக ஒரு பீல்டரை கவர்ஸ் திசையில் நிறுத்தினார்.
இந்நிலையில், போட்டி முடிந்த பின் எதிரணிக்காக பீல்டிங் செட் செய்து கொடுத்த இந்த செயல் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் ரிஷப் பண்ட்டிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து ரிஷப் பண்ட் கூறியதாவது, களத்திற்கு வெளியே இருக்கும் போது நான் தொடர்ந்து அஜய் பாயிடம் (அஜய் ஜடேஜா) பேசி வருகிறேன். யாருக்கு எதிராக விளையாடினாலும் நாம் விளையாடும் கிரிக்கெட்டின் தரம் எப்போதும் முன்னேற வேண்டும் என்று அவர் சொல்வார்.
அந்த சூழ்நிலையில் மிட் விக்கெட் திசையில் பீல்டர்கள் இல்லாததை நான் பார்த்தேன். மற்றொரு பக்கத்தில் 2 பீல்டர்கள் ஒரே இடத்தில் இருப்பதை பார்த்தேன். எனவே அதில் ஒருவரை மிட் பீல்ட் திசைக்கு நகர்த்துமாறு சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார்.