இந்த ஐபிஎல் சீசனில் சிறந்த வீரர் இவர் தான்; டிவில்லியர்ஸ் தேர்வு செய்த இளம் வீரர்....!
|16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
அகமதாபாத்,
16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது ஆனால் மழை பெய்ததன் காரணமாக ரிசர்வ் நாளான இன்று போட்டி மாற்றப்பட்டுள்ளது.
இந்த வருட ஐபிஎல் சீசனில் அதிக ரன் அடித்தவராக சுப்மன் கில் திகழ்கிறார். அவர் இதுவரை 16 இன்னிங்சில் 3 சதங்களுடன் 851 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியா பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்சிஸ் 730 ரன்களுடனும், விராட் கோலி 639 ரன்களுடனும் உள்ளனர்.
அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஷமி 28 விக்கெட்டும், ரஷித் கான் 27 விக்கெட்டும், மொகித் சர்மா 24 விக்கெட்டும் எடுத்து முதல் 3 இடங்களில் உள்ளனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் என தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,
என்னை பொறுத்தவரை இந்த சீசனில் சிறந்த வீரர் ஜெய்ஸ்வால் தான். அவர் ஒரு இளம் வீரர் மற்றும் அனைத்து விதமான ஷாட்களையும் அடிக்கிறார். அவர் மைதானத்தில் மிகவும் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறார். அவர் செய்வதை நான் ரசிக்கிறேன். பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்கிறார்.
ஜெய்ஸ்வால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன். மேலும் அவரிடம் சிறந்த வீரராக உருவாவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார் .