இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு அவர்தான் காரணம் - பி.சி.சி.ஐ தலைவர் ரோஜர் பின்னி
|இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
தர்மசாலா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த இங்கிலாந்து அடுத்த 3 போட்டிகளில் தொடர் தோல்வி கண்டு டெஸ்ட் தொடரை இழந்தது.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோசமாக கேப்டன்ஷிப் செய்யும் பென் ஸ்டோக்ஸ்தான் இங்கிலாந்தின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று பி.சி.சி.ஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பென் ஸ்டோக்ஸ் கேப்டன்ஷிப் இதுவரை அதிக ஆக்ரோசத்துடன் இருக்கிறது. அதுவே இந்த தொடரில் சில போட்டிகளில் இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக கடினமான நேரங்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை நிதானமாக விளையாடி பெரிய ரன்கள் அடிக்க வேண்டிய நேரத்தில் அவர்கள் அதிரடியாக எதிர்கொண்டு அவுட்டாகினர்.
ரோகித் மீண்டும் இத்தொடரில் நுணுக்கமாக செயல்பட்டார். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். அதை செய்வதற்கு தேவையான பவுலர்கள் அவருக்கு கிடைத்துள்ளனர். இங்கிலாந்து அணி தங்களுடைய திட்டத்தை மாற்றி விளையாடியதாக எனக்கு தெரியவில்லை.
அவர்கள் முதல் போட்டியில் அட்டாக் செய்து விளையாடியதை தொடர்கின்றனர். ஆனால் ரோகித் சர்மா மிகவும் பொறுமையாக இருந்தார். ஏனெனில் முதல் போட்டியில் வெற்றியும் ஒரு கட்டத்தில் கையில் இருந்து நழுவி சென்றது. அதை அறிந்து அடுத்த 2 போட்டிகளில் பொறுமையாக செயல்பட்ட அவர் வெற்றியும் கண்டார். இவ்வாறு அவர் கூறினார்.