அவர் எங்கள் அணியின் மேட்ச் வின்னர் - அஸ்வினுக்கு ரோகித் புகழாரம்
|இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி இந்திய வீரர் அஸ்வினுக்கு இது 100-வது டெஸ்டாகும்.
தர்மசாலா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பின்னர் சரிவில் இருந்து மீண்டெழுந்து பதிலடி கொடுத்த இந்திய அணி விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சியில் நடந்த அடுத்த 3 டெஸ்டுகளில் வரிசையாக வெற்றி பெற்று தொடரையும் 3-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.
இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இது 100-வது டெஸ்டாகும்.
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
"எந்தவொரு வீரர் 100-வது டெஸ்டில் விளையாடினாலும் அது மிகப்பெரிய சாதனை தான். அஸ்வினின் கிரிக்கெட் பயணத்தில் இது ஒரு பெரிய மைல்கல்லாகும். அவர் எங்கள் அணியின் மேட்ச் வின்னர். இத்தனை ஆண்டுகளாக அவர் அணிக்காக செய்துள்ள சாதனைகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. கடந்த 5-7 ஆண்டுகளில் அவரது செயல்பாட்டை உற்று நோக்கினால், ஒவ்வொரு தொடரிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி இருப்பது தெரியும். அவரை போன்ற வீரர்கள் நமக்கு கிடைத்திருப்பது அபூர்வமானது. அவருக்கு வாழ்த்துகள்.
3-வது டெஸ்டின் போது அவரது தாயாரின் உடல்நிலை பாதிப்பால் பாதியிலேயே சென்னை திரும்ப வேண்டிய ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டார். பிறகு எனக்கு போன் செய்து நான் திரும்ப வந்து அணியுடன் இணைந்து எனது பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன் என்று கூறினார். இது போன்ற சிந்தனைகள் உள்ள வீரரை பார்ப்பது அரிது. இத்தகைய வீரர்கள் அணியில் இருக்கும் போது களத்தில் தலைநிமிர்ந்து நிற்க முடியும்"என்று கூறினார்.