< Back
கிரிக்கெட்
அவர் ஒரு டீசல் எஞ்சினை போன்றவர் - எம்.எஸ். தோனிக்கு ஏபி டி வில்லியர்ஸ் புகழாரம்
கிரிக்கெட்

அவர் ஒரு டீசல் எஞ்சினை போன்றவர் - எம்.எஸ். தோனிக்கு ஏபி டி வில்லியர்ஸ் புகழாரம்

தினத்தந்தி
|
14 March 2024 3:55 PM IST

இந்த ஐ.பி.எல். தொடருடன் தோனி ஓய்வு பெறுவாரா என்பது யாருக்கும் தெரியாது என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

கேப்டவுன்,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். இவரது தலைமையிலேயே சென்னை அணி இதுவரை 5 கோப்பைகளையும் வென்றுள்ளது.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பின் காரணமாக தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சுகள் அதிகம் எழுந்து வந்த வேளையில் கடந்த ஆண்டு இறுதியில் தோனி ரசிகர்களின் அன்பிற்கும், பாசத்திற்காகவும் தான் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். அதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர்தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 2024 ஐ.பி.எல். தொடருடன் தோனி ஓய்வு பெறுவாரா என்பது யாருக்கும் தெரியாது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் டீசல் எஞ்சினைப்போல எப்போதும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் தோனி இம்முறையும் சிறப்பாக விளையாடி சென்னைக்கு 6-வது கோப்பையை வென்று கொடுக்க வாய்ப்பு உள்ளதாக டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு;- "கடந்த வருடம் சி.எஸ்.கே. அணி மகத்தான கிரிக்கெட்டை விளையாடியது. இந்த வருடம் எம்.எஸ். தோனி ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் காணப்படுகின்றன. அவர் மீண்டும் விளையாடுவார். இந்த வருடத்துடன் அவர் முடிப்பாரா என்பது யாருக்கும் தெரியாது.

அவர் டீசல் எஞ்சினைப்போல தொடர்ந்து ஓடக்கூடியவராக இருக்கிறார். தொடர்ந்து ஓடும் அவர் மகத்தான வீரர், சிறப்பான கேப்டன். தோனி கேப்டனாக இருப்பதும், ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக செயல்படுவதும், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் உள்ளதும் சென்னை அணியின் கலாச்சாரத்தை வாழ வைப்பதாக நான் நம்புகிறேன். அவர்களை வெல்வது எளிதல்ல.

கடந்த வருடம் கோப்பையை வென்ற அவர்கள் இம்முறை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க விரும்புவார்கள். ஆனால் தோனி மற்றும் அவர்களுடைய வீரர்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை. அது அவர்களை ஆபத்தானவர்களாக ஆக்குகிறது என்று நினைக்கிறேன். எனவே அடுத்தடுத்த கோப்பைகளை அவர்கள் வெல்வார்களா? என்று கேட்டால் நிச்சயம் அதற்கான திறமை அவர்களிடம் இருக்கிறது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்