< Back
கிரிக்கெட்
எண்ணங்களிலும் செயலிலும் அவர் ஒரு ஆஸ்திரேலியர் - இந்திய வீரரை பாராட்டிய ஸ்டீவ் சுமித்
கிரிக்கெட்

எண்ணங்களிலும் செயலிலும் அவர் ஒரு ஆஸ்திரேலியர் - இந்திய வீரரை பாராட்டிய ஸ்டீவ் சுமித்

தினத்தந்தி
|
10 Sept 2024 7:29 PM IST

எதிரணிகளுக்கு பதிலடி கொடுப்பதில் விராட் கோலி ஆஸ்திரேலியர்களின் குணத்தை கொண்டிருப்பதாக ஸ்டீவ் சுமித் கூறியுள்ளார்.

சிட்னி,

இந்திய வீரர் விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

பேட்டிங்கில் மட்டுமல்ல விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமும் அதிரடியான செயல்பாடுகளையும் வெளிப்படுத்துவதற்கு பெயர் போனவர். குறிப்பாக எதிரணியினர் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக அசராமல் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதை விராட் கோலி வழக்கமாக வைத்துள்ளார்.

எடுத்துக்காட்டாக 2014 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மிட்சேல் ஜான்சன் பவுன்சர் போட்டு விராட் கோலியின் தலையை பதம் பார்த்தார். ஆனால் அதற்காக அசராமல் திருப்பி அடித்த விராட் கோலி சதமடித்து மிட்சேல் ஜான்சனுக்கு பேட்டில் முத்தமிட்டு காற்றில் பறக்க விட்டது மறக்க முடியாது.

இந்நிலையில் எதிரணிகளுக்கு பதிலடி கொடுப்பதில் விராட் கோலி ஆஸ்திரேலியர்களை போன்ற குணத்தை கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் கூறியுள்ளார். எனவே விராட் கோலி இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலியர் என்று மறைமுகமாக பாராட்டும் ஸ்டீவ் ஸ்மித் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"எண்ணங்களிலும் செயலிலும் விராட் கோலி ஒரு ஆஸ்திரேலியர் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு போட்டியில் இறங்கும் விதம், சவாலில் இறங்கி எதிர்தரப்புக்கு மேல் வர முயற்சிக்கும் விதம் எங்களைப் போலவே உள்ளது. எனவே இந்திய வீரர்களில் அவர்தான் அதிகமான ஆஸ்திரேலியர்களின் குணத்தை கொண்டுள்ளார் என்று நான் கூறுவேன். எங்களுக்கிடையேயான போட்டி உண்மை கிடையாது.

அவரை நான் தோற்கடித்தாக வேண்டும் என்பது போல் கிடையாது. என்னால் முடிந்தளவுக்கு அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைக்க முயற்சிக்கிறேன். நாங்கள் நன்றாக பழகுகிறோம். அவ்வப்போது செய்திகளை பகிர்ந்து கொள்கிறோம். விராட் கோலி ஒரு சிறந்த வெளிப்படையான அற்புதமான வீரர். இந்த கோடைகாலத்தில் அவருக்கு எதிராக மீண்டும் விளையாடுவது நன்றாக இருக்கும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்