அவர் கடவுளின் வித்தியாசமான படைப்பு - ஆகாஷ் தீப்
|அணியில் உள்ள மற்ற பவுலர்களுக்கு பும்ரா ஆலோசனைகளை கொடுப்பதாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக டி20 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதனால் அவரை வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற உலகின் பல ஜாம்பவான் வீரர்கள் பாராட்டினர்.
மற்ற பவுலர்களைப் போல் அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான பவுலிங் ஆக்சனைக் கொண்டிருப்பது அவருடைய சிறப்பம்சமாகும். அதனால் ஆரம்பக் காலங்களில் பும்ரா கொஞ்சம் தடுமாற்றமாகவே செயல்பட்டார். இருப்பினும் அனுபவத்தால் முன்னேறிய அவர் சமீபத்திய வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா கடவுளின் வித்தியாசமான படைப்பு என்று இந்திய இளம் வீரர் ஆகாஷ் தீப் கூறியுள்ளார். தம்மை போன்ற மற்ற பவுலர்களுக்கு பும்ரா ஆலோசனைகளை கொடுப்பதாகவும் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜஸ்ப்ரித் பும்ரா போல பந்து வீசுவது மற்றவர்களுக்கு மிகவும் கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"நான் தொடர்ச்சியாக அவரிடம் பேசி அவருடைய பந்து வீச்சை உள்வாங்கி வருகிறேன். அவர் முற்றிலும் வித்தியாசமானவர். கடவுள் அவரை வித்தியாசமாக படைத்துள்ளார். அவரிடமிருந்து நான் நிறைய ஆலோசனைகளை பெற்று கற்றுக்கொண்டு வருகிறேன். அவரிடம் குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்ற மனநிலை பற்றி கேட்டறிந்தேன். அவர் என்னுடைய கேள்விகளுக்கு மதிப்புள்ள ஆலோசனைகளை கொடுத்தார். அந்தளவுக்கு பும்ரா அறிவுள்ள நபர். அது அவருடைய பந்து வீச்சில் வெளிப்படுகிறது. குறிப்பாக பந்து வீசுவதற்கு முன்பாக பேட்ஸ்மேனை பற்றி படிக்கும் அவருடைய திறன் அற்புதமானது. அவர் இந்தியாவுக்காக பரிசளிக்கப்பட்ட பவுலர். அவரை நாம் பின்பற்றுவது எளிதல்ல" என்று கூறினார்.