இனி அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற முடியாது - தேர்வுக்குழு தலைவர் திட்ட வட்டம்
|ஆஸ்திரேலிய நிர்வாகம் விரும்பினால் தான் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க தயாராக இருப்பதாக வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவிட் வார்னர், சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8786 ரன்களும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்களும், 110 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3277 ரன்களும் குவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டி டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்திருந்தார்.
இருப்பினும் ஆஸ்திரேலிய நிர்வாகம் விரும்பினால் தான் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தார். இப்படி வார்னர் தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தாலும் அவர் இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் தேர்வுக்குழு தலைவரான ஜார்ஜ் பெய்லி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "டேவிட் வார்னர் ஒரு ஓய்வு பெற்ற வீரர் என்பதே எங்களது புரிதல். அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நம்ப முடியாத பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது இந்த பங்களிப்பை பாராட்டலாம். ஆனால் இனிவரும் எங்களது அணியின் திட்டத்தில் அவர் இடம்பெற முடியாது" என்று கூறினார்.