இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஹாரி புரூக்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஹாரி புரூக் சதமடித்து அசத்தினார்.
லண்டன்,
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளும், இங்கிலாந்து 1 வெற்றியும் பெற்றுள்ளன. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
அதன்படி நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் அடித்தார்.
பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 37.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது ஹாரி புரூக் 110 ரன்னுடனும் (94 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), லியாம் லிவிங்ஸ்டன் 33 ரன்னுடனும் (20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து கனமழை பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க 'டக்வொர்த் லீவிஸ்' விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 209 ரன்களே தேவையாக இருந்தது. இதனால் இங்கிலாந்து 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதத்தை எட்டிய ஹாரி புரூக் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
ஹாரி புரூக் (25 வயது 215 நாட்கள்) ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இளம் இங்கிலாந்து கேப்டன் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு அலஸ்டயர் குக் 26 வயது 190 நாட்களில் சதம் அடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை தகர்த்துள்ள ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார்.