ஹர்மன்பிரீத் கவுரின் மெத்தனத்தால் அரையிறுதியில் கைநழுவிப்போன வெற்றி
|பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
கேப்டவுன்,
பெண்கள் உலகக் கோப்பை
8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் கேப்டவுனில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மல்லுக்கட்டின.
இந்திய அணியில் 3 மாற்றமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பூஜா வஸ்ட்ராகர் மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சினே ராணா, ராதா யாதவ், யாஸ்திகா பாட்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இந்த ஆட்டத்தில் களம் கண்டார்.
மோசமான பீல்டிங்
'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகள் பெத் மூனியும், அலிசா ஹீலியும் பவுண்டரியுடன் இன்னிங்சை தொடங்கினர். தங்கள் அணிக்கு வலுவான தொடக்கம் தந்த இவர்கள் ஸ்கோர் 52-ஐ எட்டிய போது (7.3 ஓவர்) பிரிந்தனர். சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவின் பந்து வீச்சில் அலிசா ஹீலி (25 ரன்), கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது ஸ்டம்பிங் செய்யப்பட்டார். 2-வது விக்கெட்டுக்கு நுழைந்த கேப்டன் மெக் லானிங் ஒரு ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் வழங்கிய கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் நழுவ விட்டார்.
இந்தியாவின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. சில கேட்ச்களையும், ரன் தடுப்பையும் கோட்டை விட்டனர். பெத் மூனிக்கு 32 ரன்னில் ஷபாலி வர்மா எளிதான கேட்ச் வாய்ப்பை வீணடித்தார். அதன் பிறகு 4 பவுண்டரிகள் விளாசிய பெத் மூனி 54 ரன்களில் (37 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அதே ஷபாலியிடம் பிடிபட்டார்.
173 ரன் இலக்கு
அடுத்து ஆஷ்லி கார்ட்னெர், கேப்டன் மெக் லானிங்குடன் கைகோர்த்தார். இருவரும் கடைசி கட்டத்தில் தடாலடியாக மட்டையை சுழற்றினர். இதனால் ரன்ரேட் மளமளவென உயர்ந்தது. கார்ட்னெர் தனது பங்குக்கு 31 ரன்கள் (18 பந்து, 5 பவுண்டரி) எடுத்த நிலையில் போல்டு ஆனார். கடைசி ஓவரில் மெக் லானிங் தூக்கியடித்த இரு சிக்சருடன் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்தது. மெக் லானிங் 49 ரன்களுடனும் (34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), எலிஸ் பெர்ரி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் 59 ரன்கள் திரட்டினர்.
அடுத்து 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷபாலி வர்மா (9 ரன்), துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (2 ரன்), யாஸ்திகா பாட்டியா (4 ரன்) வரிசையாக நடையை கட்டினர். 28 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த இந்திய அணியை ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து நிமிர வைத்தனர். பதற்றமின்றி ஆஸ்திரேலிய பந்து வீச்சை நொறுக்கிய இவர்கள் இலக்கை நோக்கி துரிதமாக முன்னேறினர்.
ஹர்மன்பிரீத் 52 ரன்
ஸ்கோர் 97 ஆக உயர்ந்த போது (10.2 ஓவர்) ரோட்ரிக்ஸ் 43 ரன்களில் (24 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார். என்றாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நின்றதால் நம்பிக்கை குறையவில்லை. வார்ஹாமின் பந்து வீச்சில் அடுத்தடுத்து இரு பவுண்டரி விரட்டியடித்து அரைசதத்தை பூர்த்தி செய்த ஹர்மன்பிரீத் கவுர் (52 ரன், 34 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். அவர் வெளியேறிய போது இந்தியாவுக்கு 32 பந்தில் 40 ரன்கள் தேவையாக இருந்தது.
அதன் பிறகு இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. இந்த சூழலை திறமையாக கையாண்ட ஆஸ்திரேலியா பீல்டிங்கிலும் பிரமாதப்படுத்தியது. இதனால் மீண்டும் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியது. விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் (14 ரன்), சினே ராணா (11 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லி கார்ட்னெர் வீசினார். துல்லியமாக பந்து வீசிய அவர் ராதா யாதவின் (0) விக்கெட்டை வீழ்த்தியதுடன் 10 ரன் மட்டுமே வழங்கி தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலியா வெற்றி
20 ஓவர்களில் இந்திய அணியால் 8 விக்கெட்டுக்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தொடர்ந்து 7-வது முறையாக இறுதி சுற்றை எட்டியிருக்கிறது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னெர் (31 ரன் மற்றும் 2 விக்கெட்) ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றியின் விளிம்புக்கு வந்து சறுக்கிய இந்திய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. அந்த சோகம் இந்த முறையும் நீடிக்கிறது.
இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவுரின் மெத்தனம்
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்ட கிடைத்த பொன்னான வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது. இந்த மோதலில் ஒரு கட்டத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் நேர்த்தியான பேட்டிங்கால் இந்தியா வெற்றியை நோக்கி பயணிப்பது போல் தெரிந்தது.
அரைசதம் விளாசி சூப்பராக விளையாடிக் கொண்டிருந்த ஹர்மன் பிரீத் கவுர் தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஓடிய போது ரன்-அவுட்டில் வீழ்ந்தார். அவர் 2-வது ரன்னுக்கு மெதுவாகவே ஓடினார். அது மட்டுமின்றி கிரீசுக்குள் பேட்டை வைப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும், மெத்தனமாக செயல்பட்டதால் ரன்-அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது. அது தான் போட்டியின் திருப்புமுனையாகவும் மாறியது.