< Back
கிரிக்கெட்
இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க வேண்டும் - ஸ்ரீகாந்த் சொல்கிறார்
கிரிக்கெட்

இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க வேண்டும் - ஸ்ரீகாந்த் சொல்கிறார்

தினத்தந்தி
|
15 Nov 2022 3:38 AM IST

இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு கமிட்டி தலைவருமான ஸ்ரீகாந்த் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்திய 20 ஓவர் போட்டிக்கான முழு நேர கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க வேண்டும். தேர்வு கமிட்டி தலைவராக நான் இருந்திருந்தால், 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டயா இருப்பார் என்று நேரடியாக சொல்லி இருப்பேன்.

அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இப்போதில் இருந்தே அணியை தயார்படுத்த வேண்டும். உலக கோப்பை போட்டிக்கு 2 ஆண்டுக்கு முன்பு இருந்து தயார்படுத்துவதே சிறப்பானதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அணிக்கு நிறைய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் அவசியமாகும்.

1983-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை, 2011-ம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் நாம் எப்படி வெற்றி பெற்றோம் என்பதை பாருங்கள். அணியில் கணிசமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். இத்தகைய வீரர்களை நாம் அடையாளம் காண வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

இந்திய அணி அடுத்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 18-ந்தேதி வெலிங்டனில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் இந்திய 20 ஓவர் அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்