"உங்கள் வீழ்ச்சியை விட எழுச்சி..."- காயம் காரணமாக அன்று களத்தை நீங்கிய படத்தை பகிர்ந்த பாண்டியா
|ஆசிய கோப்பையில் காயமடைந்த போது களத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட படத்தை பாண்டியா பகிர்ந்துள்ளார்.
துபாய்,
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாண்டியா 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த நிலையில் கிரிக்கெட்டில் தான் சந்தித்த பின்னடைவு மற்றும் அதன் பிறகு அதே களத்தில் தனது கம்பேக்கை சுட்டிக்காட்டும் படங்களை பாண்டியா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் ஆல்ரவுண்ட் நம்பிக்கை நட்சத்திரமாக பாண்டியா விளங்கி வந்தார்.
இருப்பினும் அவ்வப்போது காயங்களால் அவதிப்பட்டு வந்த அவர் பந்துவீச்சில் சிரமங்களை சந்தித்தார். பின்னர் காயத்திலிருந்து மீண்டு இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடத்தி மகுடம் சூட வைத்தார். அதை தொடர்ந்து இந்திய அணிக்கும் மீண்டும் கம்பேக் கொடுத்து கலக்கி வருகிறார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், கடந்த 2018 ஆசிய கோப்பையின் போது காயமடைந்த காரணத்தால் களத்தில் இருந்து 'ஸ்ட்ரெச்சரில்' கொண்டு செல்லப்பட்ட படத்தையும், நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டத்தை வென்று கொடுத்த படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர், "உங்கள் வீழ்ச்சியை விட எழுச்சி பெரிதாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களும் பாண்டியாவை புகழ்ந்த வண்ணம் உள்ளனர்.