இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஹர்பஜன் சிங் ஆர்வம்
|ஜூலை 1-ந் தேதி முதல் 2027 டிசம்பர் 31-ந்தேி வரை அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை,
ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. இப்போதே தொடங்கி உள்ளது. அதன்படி அந்த பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ.க்கு வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என்று காலக்கெடு விதித்துள்ளது.
மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்குட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் பி.சி.சி.ஐ. விதித்துள்ளது. விருப்பம் இருந்தால் ராகுல் டிராவிட்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் விண்ணப்பிக்க விருப்பம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பி.சி.சி.ஐ வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்புவதாகவும் தகவல் வெளியானது. ரிக்கி பாண்டிங், பிளெமிங் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையே பி.சி.சி.ஐ சார்பில் கவுதம் கம்பீரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு நடந்தால் கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவி மீது ஆர்வம் உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி மீது ஆர்வம் உள்ளது. வீரர்களுக்கு டெக்னிக்கல் திறனை சொல்லிக் கொடுப்பதைவிட அணி மேலாண்மை திறன் குறித்து பயிற்சி அளிப்பதுதான் முக்கியம். விண்ணப்பம் செய்வேனா என்பது எனக்குத் தெரியாது. இந்திய அணியின் பயிற்சி, நபரின் (வீரர்) மேலாண்மை திறன் பற்றியது. அவர்களுக்கு எப்படி டிரைவ் ஆட வேண்டும், புல் ஷாட் ஆட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிப்பது அல்ல. அது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும்.
அவர்களுக்கு உங்களால் சில வழிகாட்டுதல்களை கொடுக்க முடியும். கிரிக்கெட் எனக்கு ஏராளம் கொடுத்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் அதை மகிழ்ச்சியுடன் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். ஜூலை 1-ந் தேதி முதல் 2027 டிசம்பர் 31-ந்தேி வரை அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.