< Back
கிரிக்கெட்
சிறந்த அணியுடன் கோப்பையை பகிர்வதில் மகிழ்ச்சி - பா.சிவந்தி ஆதித்தன்
கிரிக்கெட்

"சிறந்த அணியுடன் கோப்பையை பகிர்வதில் மகிழ்ச்சி" - பா.சிவந்தி ஆதித்தன்

தினத்தந்தி
|
1 Aug 2022 4:25 AM IST

சிறப்பாக விளையாடிய அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் தெரிவித்துள்ளார்.

கோவை,

8 அணிகள் பங்கேற்ற 6வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பில்.) 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதி போட்டி கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு அரங்கேறியது. மகுடத்துக்கான இந்த பலப்பரீட்சையில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின.

முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 17 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 வி க்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 5 ஓவர்கள் வீசியிருந்தால் மட்டுமே எந்த அணிக்கு கோப்பை என்று அறிவிக்க முடியும். ஆனால் மழையினால் 4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதால் கோப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.

இதன்மூலம் டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (4 முறை) என்ற பெருமையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தக்க வைத்தது. இதேபோல ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பட்டத்தை வென்றது.

இந்நிலையில் சிறப்பாக விளையாடிய அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "5 முறை இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறோம். 4 முறை கோப்பையை

வென்றிருக்கிறோம். சிறப்பாக விளையாடிய அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி" என்று பா.சிவந்தி ஆதித்தன் தெரிவித்தார்.

தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமந்த் பதானி அளித்த பேட்டியில், "மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று, ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த ஆண்டும் ஒவ்வொரு ஆட்டத்தையும் சிறப்பாக விளையாடுவோம்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்