அது நடந்திருந்தால் விராட், ரோகித் ஆகியோரில் ஒருவர் இந்த உலகக்கோப்பையில் விளையாடியிருக்க மாட்டார்கள் - சேவாக்
|டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
மும்பை,
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எட்டின.
அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், 2023 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தால் 2024 டி20 உலகக்கோப்பையில் விராட் அல்லது ரோகித் ஆகியோரில் ஒருவர் விளையாடியிருக்க மாட்டார் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். அதே போல இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் 2026 டி20 உலகக் கோப்பையில் ஒன்றாக விளையாடுவதை பார்ப்பது கடினம் என்றும் சேவாக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, எந்த ஒரு சீனியர் வீரருக்கும் இதுவே நம்முடைய கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம் என்பது மனதில் இருக்கும். எனவே இதை நான் உச்சமாக முடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். ஒருவேளை கடந்த வருடம் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தால் அந்த இருவரில் (விராட் மற்றும் ரோகித்) ஒருவர் இந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருக்க மாட்டார். ஆனால் அவர்கள் வெல்லவில்லை.
எனவே இந்திய அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் இந்த கோப்பையை வெல்வதற்கான பசி அவர்களிடம் இருக்கிறது. இம்முறை இந்தியா வென்றால் இதுவே அவர்களுடைய கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம். இருவரும் இன்னுமொரு ஐ.சி.சி வெள்ளைப் பந்து தொடரில் விளையாட மாட்டோம் என்று சொல்லக்கூடும். அதே சமயம் அவர்கள் பிட்டாக நன்றாக செயல்பட்டால் ஏன் விளையாடக்கூடாது? இன்னும் ஒரு வருடம் கூட அவர்கள் விளையாடலாம். இவ்வாறு அவர் கூறினார்.