< Back
கிரிக்கெட்
நான் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்திருந்தால் அவரை அணியில் எடுத்திருக்க மாட்டேன் - சீனியர் வீரரை விளாசிய சேவாக்

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

நான் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்திருந்தால் அவரை அணியில் எடுத்திருக்க மாட்டேன் - சீனியர் வீரரை விளாசிய சேவாக்

தினத்தந்தி
|
22 April 2024 1:42 PM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

முல்லன்பூர்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி குஜராத் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

20 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 35 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் திவேட்டியா 36 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆட்டத்தையும் சேர்த்து 8 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்த பஞ்சாப் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருப்பதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் ஆரம்பக்கட்ட போட்டிகளில் பஞ்சாப் கேப்டனாக செயல்பட்ட ஷிகர் தவான் காயத்தால் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக ரூ. 18.50 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கேப்டனானதும் சாம் கர்ரன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி ஆடி வருகிறார். அசுதோஷ் சர்மா, ஷஷாங் சிங் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை விட்டுவிட்டு தாமே ஓப்பனிங்கில் களமிறங்கும் அவர் இதுவரை பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் பஞ்சாப் நிர்வாகத்தில் நான் இருந்திருந்தால் சாம் கர்ரனை அணியில் எடுத்திருக்க மாட்டேன் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஒருவேளை நான் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்தால் அவரை எனது அணியில் கூட எடுத்திருக்க மாட்டேன். பேட்டிங் ஆல் ரவுண்டர் அல்லது பவுலிங் ஆல் ரவுண்டர் ஆகிய எந்த வேலைக்கும் அவரை எடுத்திருக்க மாட்டேன்.

கொஞ்சமாக மட்டும் பந்து வீசி, பேட்டிங் செய்யும் அவரைப் போன்ற வீரரால் எந்த பயனுமில்லை. ஒன்று நீங்கள் நன்றாக பேட்டிங் செய்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது பந்து வீசி போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் எதையும் சரியாக செய்யாத அவரை போன்ற வீரரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்