சென்னையை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி பெற்றது.
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, தொடக்க ஆட்டக்காரரக்ளான கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சனின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இருவரும் இணைந்து தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் 210 ரன்கள் குவித்து அசத்தினர்.
இதனை தொடர்ந்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் ரகானே தலா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கெய்க்வாட் டக் ஆவுட் ஆனார்.
பின்னர் கை கோர்த்த டேரில் மிட்செல் - மொயீன் அலி இருவரும் அதிரடியில் மிரட்டினர். குஜராத் பந்து வீச்சை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறக்க விட்டு அதிரடியில் மிரட்டினர். 27 பந்துகளில் அரைசதம் அடித்த டேரில் மிட்செல் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். நூர் அகமது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்டு அரைசதம் அடித்த மொயீன் அலி 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சிறுது நேரம் அதிரடி காட்டிய ஷிவம் துபே 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜடேஜாவும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய எம்.எஸ்.தோனி 26 ரன்கள் அடித்தார்.
முடிவில் சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி குஜராத் டைட்ட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக மொகித் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.