< Back
கிரிக்கெட்
நான் தீப்தி சர்மா கிடையாது - சர்ச்சையை ஏற்படுத்திய மிட்செல் ஸ்டார்க்கை சாடிய முன்னாள் வீரர்

Image Courtesy: AFP/ Screengrab 

கிரிக்கெட்

"நான் தீப்தி சர்மா கிடையாது" - சர்ச்சையை ஏற்படுத்திய மிட்செல் ஸ்டார்க்கை சாடிய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
16 Oct 2022 6:52 PM IST

தீப்தி சர்மா குறித்து பேசியதற்கு ஸ்டார்க்கை, இந்திய அணியின் முன்னாள் வீரர் சாடியுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க், தேவையின்றி இந்திய அணியின் வீராங்கனையை சீண்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸின் 5-வது ஓவரின் போது ஸ்டார்க் பந்துவீச அதை டேவிட் மலான் எதிர்கொண்டார். ஸ்டார்க் பந்துவீசும் போதே எதிர்முனையில் இருந்த பட்லர் வெள்ளைக்கோட்டில் இருந்து தாண்டி வந்தார். பின்னர் மலான் அடித்த அந்த பந்து ஸ்டார்க் கைக்கு செல்ல, அப்போது அவர் எதிர்முனையில் பட்லர் தாண்டி வந்ததை கவனித்து அவரிடம், " மன்கட் ரன் அவுட் செய்வதற்கு நான் தீப்தி சர்மா கிடையாது. நான் அதை செய்ய மாட்டேன். அதற்காக நீங்கள் இப்படியே தொடர்ந்து வெளியே வரக்கூடாது" என தெரிவித்தார்.

இதுகுறித்த ஸ்டார்க்-யின் ஆடியோ ஸ்டம்ப் மைக்-யில் பதிவானது. பின்னர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக, இந்திய ரசிகர்கள் அவரை விமர்சிக்க தொடங்கினர். சமீபத்தில் இதே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் முறையில் ரன் அவுட் செய்திருந்தார். அது ஐசிசி விதிமுறைக்கு உட்பட்டதாக இருந்தாலும் சில முன்னாள் வீரர்கள் அதை விமர்சித்தனர். அதே நேரத்தில் அவருக்கு ஆதரவும் இருந்தது.

இந்த நிலையில் தீப்தி சர்மா குறித்து பேசியதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி, ஸ்டார்க்கை சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " ஸ்டார்க், நீங்கள் செய்தது மிகவும் மோசமானது. தீப்தி செய்தது விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டது. 'நான் ஸ்ட்ரைக்கரை' எச்சரித்து, அவரை அவுட்டாக்காமல் இருக்க விரும்பினால், அது நல்லது. அது நீங்கள் எடுக்கும் முடிவு. ஆனால் நீங்கள் தீப்தியை இதற்குள் கொண்டு வந்ததை கிரிக்கெட் உலகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்