அபார பேட்டிங்: இலங்கையை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்..!!
|உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
புனே,
ஐசிசி நடத்தி வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் -இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்காவும், கருணரத்னேவும் களமிறங்கினர்.
இவர்களில் கருணரத்னே 15 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து, நிசாங்கா- கேப்டன் குசல் மெண்டிஸ் ஜோடி, 2-வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 62 ரன்களை எடுத்தது. உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிவரும் நிசாங்கா, 46 ரன்னில் ஆட்டமிழந்தார். இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். கேப்டன் குசல் மெண்டிஸ் (39), சமரவிக்ரமா (36), அசலங்கா (22), டி சில்வா (14), தீக்ஷனா (39) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை 49.3 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. முதலாவதாக களமிறங்கிய குர்பாஸ் (0) ரன் ஏதும் எடுக்காத நிலையில் வெளியேற, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்படி இப்ராகிம் ஷர்டான் 39 ரன்களும், ரஹ்மத் ஷா 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹஸ்மத்துல்லா ஷாகிடி 58 (74) ரன்களும், ஓமர்சாய் 73 (63) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 242 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக மதுஷங்கா 2 விக்கெட்டுகளும், ரஜிதா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றதுடன், உலகக்கோப்பை தொடரில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பரூக்கீ பெற்றுக்கொண்டார். .