< Back
கிரிக்கெட்
பேரழிவிலிருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி - வீங்கிய கண்ணுடன் கிரிக்கெட் வீரர் பகிர்ந்த புகைப்படம்
கிரிக்கெட்

'பேரழிவிலிருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி' - வீங்கிய கண்ணுடன் கிரிக்கெட் வீரர் பகிர்ந்த புகைப்படம்

தினத்தந்தி
|
1 Oct 2022 8:42 PM IST

19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த் வீங்கிய கண்ணுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சந்த், அமெரிக்காவில் நடந்த மைனர் லீக் கிரிக்கெட் போட்டியில் சிலிக்கான் வேலி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடும் போது இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது இடது கண் கடுமையாக வீங்கியுள்ளது. இதனால் அவரால் கண்ணை திறக்க முடியவில்லை. அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒரு தடகள வீரருக்கு இது ஒருபோதும் சுமூகமான சவாரி அல்ல. சில நாட்களில் நீங்கள் வெற்றியுடன் வீட்டுக்கு வருகிறீர்கள், மற்ற நாட்களில் ஏமாற்றத்துடன் வருவீர்கள். மேலும் சில நாட்களில் காயங்கள் மற்றும் தழும்புகளுடன் வீட்டுக்கு வருவீர்கள்.

பேரழிவில் இருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி. கடினமாக விளையாடுங்கள் ஆனால் பாதுகாப்பாக இருங்கள். இது ஒரு மெல்லிய கோடு. வாழ்த்துக்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற உன்முக்த் சந்த், ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடிய முதல் இந்திய வீரர் ஆனார். சந்த் தன்னுடைய முதல் சீசனில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடினார்.

கடந்த 2012-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த சந்த், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதுவரை 79 டி20 போட்டிகளுடன் 67 முதல் தர போட்டிகளிலும், 120 'லிஸ்ட் ஏ' விளையாட்டுகளிலும் விளையாடியுள்ளார்.

மேலும் செய்திகள்