< Back
கிரிக்கெட்
மைதானத்தில் கோலி- கம்பீர் மோதல்... அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்- மூலக்காரணம் என்ன..?
கிரிக்கெட்

மைதானத்தில் கோலி- கம்பீர் மோதல்... அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்- மூலக்காரணம் என்ன..?

தினத்தந்தி
|
3 May 2023 3:03 AM IST

லக்னோவில் நடந்த பெங்களூரு-லக்னோ அணிகள் இடையிலான ஆட்டம் முடிந்ததும் மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, கவுதம் கம்பீர் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

லக்னோ,

பெங்களூரு அணி பதிலடி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்ததுடன் அந்த அணிக்கு எதிரான முந்தைய தோல்விக்கும் பழிதீர்த்தது.

இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுத்தது. இந்த சிறிய இலக்கை கூட எடுக்க முடியாமல் லக்னோ அணி 19.5 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டு 4-வது தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (44 ரன்கள்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முன்னதாக லக்னோ அணி பேட்டிங் செய்த போது, பீல்டிங்கில் நின்ற பெங்களூரு நட்சத்திர வீரர் விராட்கோலி மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார். விக்கெட் வீழ்ந்த போதெல்லாம் ஆவேசமாக கத்திய அவர் அவ்வப்போது ரசிகர்களை நோக்கி ஆதரவு குரல் எழுப்பும்படி சைகை மூலம் கேட்டுக்கொண்டார். 17-வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த லக்னோ வீரர் நவீன் உல்-ஹக், விராட்கோலி குறித்து ஏதோ நடுவரிடம் புகார் தெரிவிக்க இருவருக்கும் இடையே உரசல் ஆரம்பமானது.

விராட்கோலி-கம்பீர் மோதல்

இந்த உரசல் போட்டி முடிந்த பிறகும் பிரதிபலித்தது. போட்டி முடிந்ததும் இரு அணியினரும் பரஸ்பரம் கைகுலுக்கும் போது நவீன் உல்-ஹக்கும், விராட்கோலியும் மீண்டும் முறைத்து கொண்டதுடன் இருவரும் கோபமாக ஏதோ கூறிவிட்டு நகர்ந்தனர். அடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ், விராட்கோலியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.. அவரை அந்த அணியின் ஆலோசகரும், இந்திய முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் அழைத்து சென்றார்.

இதனால் சட்டென்று கோபத்தில் விராட்கோலி ஏதோ வார்த்தையை உதிர்க்க, கம்பீரும் பதிலுக்கு திட்டியதுடன் கோலியை நோக்கி அடிப்பது போல் நெருங்கினார். இருவரும் காரசாரமாக விவாதிக்க, மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதைத் தொடர்ந்து அமித் மிஸ்ரா உள்ளிட்ட சக வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி விட்டனர். எனவே சிறிது நேரம் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது. வீரர்களின் சிறுபிள்ளைத்தனமான மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

களத்தில் நடந்த சம்பவத்தை அங்கேயே மறந்து விட்டு நாகரீகமாக கைகுலுக்குவதை விடுத்து வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு மோதல் போக்கை கடைப்பிடித்த சம்பவம் ரசிகர்களை மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருக்கிறது.

அபராதம்

மூன்று பேரும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்கள் மீது ஐ.பி.எல். நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. போட்டி விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக விராட்கோலி, கவுதம் கம்பீர் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதத்தையும், நவீன் உல்-ஹக்குக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தையும் ஐ.பி.எல். நிர்வாகம் அபராதமாக விதித்தது. இதனால் விராட்கோலிக்கு ரூ.1 கோடியும், கம்பீருக்கு சுமார் ரூ.25 லட்சமும் இழப்பு ஏற்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அளவுக்கு அதிகமான ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டதாக விராட்கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

சண்டைக்கு மூலக்காரணம்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 213 ரன் இலக்கை லக்னோ அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டம் முடிந்ததும் மைதானத்துக்குள் வலம் வந்த கவுதம் கம்பீர், ரசிகர்களை நோக்கி 'நாங்கள் தான் ஜெயித்து விட்டோமே... இன்னும் ஏன் சத்தம் போடுகிறீர்கள்' என்பதை கைவிரலை வாயில் வைத்து சைகை மூலம் காட்டினார். அதை மனதில் வைத்து தான் இந்த ஆட்டத்தின் போது விராட்கோலி பதிலடி கொடுத்து இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

கம்பீருடனான உரசலுக்கு பிறகு பெங்களூரு அணியின் யுடியுப்பில் விராட்கோலி வெளியிட்டுள்ள வீடியோவில், 'இது ஒரு இனிமையான வெற்றி. நீங்கள் ஒன்றை கொடுக்க நினைக்கிறீர்கள் என்றால் அதனை திரும்ப பெற்றுக் கொள்ளவும் தயாராக இருங்கள். இல்லையென்றால் அதனை செய்யாதீர்கள்' என்று கம்பீரை மறைமுகமாக சாடினார்.

மேலும்,' இது எங்களுக்கு முக்கியமான வெற்றி. உள்ளூர் ரசிகர்களிடம் இருந்து லக்னோவை விட எங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்ததை நம்ப முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் எவ்வளவு விரும்பப்படுகிறோம். மக்கள் எந்த அளவுக்கு எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்முறையல்ல...

கம்பீர், கோலி களத்தில் சீண்டுவது இது முதல்முறையல்ல. 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாகவும், விராட் கோலி பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியின் கேப்டனாகவும் இருந்தனர். அப்போது லீக் சுற்றில் சந்தித்த ஆட்டத்தின் போது இருவரும் கைகலப்பில் ஈடுபடுவது போல் ஆவேசமாக முட்டிக் கொண்டதுடன், இதே போல் பெரும்தொகையை அபராதமாக இழந்தது நினைவிருக்கலாம்.

மேலும் செய்திகள்