கடைசி டி20 போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் - பாக். முன்னாள் வீரர்
|நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என பாக். முன்னாள் வீரர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
லாகூர்,
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக நடைபெற்று வரும் டி20 தொடரின் இரு ஆட்டங்கள் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளன. தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் 3 போட்டிகளில் 360 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதே போல திறமையான ஆட்டத்தை அவர் டி20 போட்டிகளில் காட்ட முடியாமல் திணறி வருகிறார்.
இந்நிலையில், நாளை நடைபெறும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜூனியர் உலகக்கோப்பையை வென்று கொடுத்த அதிரடி ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடரபாக அவர் கூறும்போது,
இது கடைசி ஆட்டம். சுப்மன் கில் எப்படி விளையாடுகிறார் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பிரித்வி ஷா ஒரு அற்புதமான இளம் கிரிக்கெட் வீரர். அவரது அதிரடி ஆட்டத்துக்கு அவர் பெயர் பெற்றவர். நீங்கள் அவருக்கு சுப்மன் கில் இடத்தில் வாய்ப்பு கொடுங்கள். ஷாவுக்கு திறமை இருக்கிறது. அவர் தொடர்ந்து விளையாடினால் அவரால் தனது திறமையை வெளிப்படுத்து அற்புதங்களை செய்ய முடியும்.
சுப்மன் கில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அவரது பேட்டிங்கில் உள்ள சில குறைகளை பார்க்க வேண்டும். அவர் சுழற்பந்து வீச்சு மற்ற்ம் பவுன்ஸ் பந்துகள் போடும் போது தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்த இன்னும் உழைக்க வேண்டும். இந்தியா வெற்றி பெற்றுள்ளது, ஆனாலும் அணியில் இன்னும் சில முன்னேற்றங்கள் தேவை. சில சமயங்களில் கடினமான பிட்ச்களில் விளையாட வேண்டி இருக்கும்.
கடைசி டி 20 போட்டியில் இஷான் கிஷானை நீங்கள் வெளியே உட்கார வைத்தால் விக்கெட் கீப்பராக யாரை உள்ளே எடுப்பீர்கள். எனவே அணியில் மற்றொரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.