< Back
கிரிக்கெட்
ராஞ்சி விமான நிலையத்தில்  பாதுகாவலரை சந்தித்து பேசிய கில்... யார் அவர்?
கிரிக்கெட்

ராஞ்சி விமான நிலையத்தில் பாதுகாவலரை சந்தித்து பேசிய கில்... யார் அவர்?

தினத்தந்தி
|
29 Feb 2024 2:02 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.

ராஞ்சி,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ராஞ்சியிலிருந்து இமாச்சல் பிரதேசத்திற்கு புறப்பட்டு சென்றனர். அதற்காக ராஞ்சி விமான நிலையத்திற்கு வந்த இந்திய வீரர்களில் சுப்மன் கில் மட்டும் அங்கே இருந்த பாதுகாவலர் ஒருவரிடம் சென்று பேசினார்.

அந்த பாதுகாவலர் வேறு யாருமல்ல. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ராபின் மின்சின் தந்தை பிரான்சிஸ் ஆவார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் தற்போது ராஞ்சி விமான நிலையத்தில் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களில் ஒருவரான அவருடைய 21 வயதாகும் மகன் ராபின் மின்ஸ் கடந்த சில வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அதில் கடந்த வருடம் உள்ளூரில் நடைபெற்ற ஒரு டி20 தொடரில் ஒடிசாவுக்கு எதிராக 35 பந்துகளில் 73 ரன்கள் அடித்த ராபின் மின்சை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.6 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. அதனால் ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்ட முதல் பழங்குடியின பிரிவை சேர்ந்த வீரர் என்ற பெருமையை ராபின் மின்ஸ் பெற்றார்.

அந்த நிலையில் குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியதை தொடர்ந்து சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் தம்முடைய அணியில் விளையாட உள்ள ராபின் மின்ஸ் பற்றி அவருடைய தந்தையிடம் சுப்மன் கில் பேசினார்.

அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுப்மன் கில், "ராபின் மின்சின் தந்தையை சந்தித்ததில் பெருமை. உங்களின் பயணமும் கடின உழைப்பும் ஊக்கமளிக்கிறது. உங்களை ஐ.பி.எல். தொடரில் காண காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்