100 சதவீத உடல் தகுதியை நோக்கி மீண்டு வந்து கொண்டிருக்கிறேன் - ரிஷப் பண்ட்
|துபாயில் நேற்று நடந்த வீரர்கள் ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ரிஷப் பண்ட் கலந்துகொண்டார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துள்ள ரிஷப் பண்ட் தேறி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துபாயில் நேற்று நடந்த வீரர்கள் ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ரிஷப் பண்ட் கலந்துகொண்டார்.
அங்கு அவர் அளித்த பேட்டியில், 'கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். 100 சதவீத உடல் தகுதியை நோக்கி மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில மாதங்களில் முழு உடல் தகுதியை எட்ட முடியும் என்று நம்புகிறேன். நான் கடினமான தருணத்தில் இருக்கையில் மக்கள் அளித்த ஆதரவும், காட்டிய அன்பும் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உதவிகரமாக இருந்தது. எல்லா நேரத்திலும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.' என்றார்.