சீக்கிரம் அவுட்டாகுங்கள் - குல்தீப் யாதவை ஜாலியாக வம்பிழுத்த ரிஷப் பண்ட்
|துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
பெங்களூரு,
துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளன. அதில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியை அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணிக்கு முஷீர் கான் 181 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
முன்னதாக இப்போட்டியில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்த பின் முதல் முறையாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். காயத்திற்கு பின் ஐபிஎல் தொடரில் விளையாடி கம்பேக் கொடுத்த அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடி இந்திய அணியின் வெற்றியில் பங்காற்றினார்.
அதைத் தொடர்ந்து தற்போது கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் முழுமையாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அதில் இந்தியா பி அணிக்காக முக்கியமான 2வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய அவர் 34 பந்துகளில் அரை சதமடித்தார். அந்த வகையில் பேட்டிங்கில் அதிரடியான கம்பேக் கொடுத்த அவர் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 61 (47) ரன்கள் விளாசி வெற்றியில் பங்காற்றினார்.
அதை விட 4வது நாள் துவக்கத்தில் பேட்டிங் செய்ய வந்த இந்தியா பி அணியை எப்படி விரைவாக சுருட்டலாம் என்று இந்தியா ஏ கேப்டன் சுப்மன் கில் தமது வீரர்களுடன் தோள் மீது கை போட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது விளையாட்டாக அங்கே புகுந்த ரிஷப் பண்ட் இந்தியா ஏ வீரர்களுடன் வீரராக சேர்ந்து தோள் மீது கை போட்டு அந்தத் திட்டங்களை கேட்டுச் சென்றார்.
அதே போல 2வது இன்னிங்சில் 141-7 என தடுமாறிய இந்தியா ஏ அணிக்கு குல்தீப் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது அவரிடம் ரிஷப் பண்ட், 'இவரை சிங்கிள் எடுக்க விடுங்கள். இவருக்காக நான் திட்டம் வைத்திருக்கிறேன்' என்று ஜாலியாக வம்பிழுத்தது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
அதற்கு குல்தீப் யாதவ், 'சரி திட்டம் போடுங்கள். இப்போது நீங்கள் அமைதியாகுங்கள்' என்று அவரிடம் சிரித்துக்கொண்டே சொன்னார்.
அதற்கு சிரித்துக் கொண்டே, 'அப்படி என்றால் சீக்கிரமாக அவுட்டாகுங்கள்' என்று அவரிடம் ரிஷப் பண்ட் சொன்னது வர்ணனையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.