"காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட அணி தான் வெல்லும் என்ற நிலைமை போய் விட்டது" - மத்தியபிரதேச கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா
|ரஞ்சி கோப்பையை வென்றது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் என மத்தியபிரதேச அணியின் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா கூறினார்.
பெங்களூரு,
87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை- மத்தியபிரதேச அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் கடந்த 22-ந்தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மும்பை 374 ரன்களும், மத்தியபிரதேசம் 536 ரன்களும் குவித்தன. 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மும்பை அணி 57.3 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மத்தியபிரதேச அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய பிரதேச அணி 2-வது இன்னிங்சில் 29.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மகுடம் சூடியது.
1934-35-ம் ஆண்டு முதல் நடந்து வரும் ரஞ்சி கிரிக்கெட்டில் மத்தியபிரதேச அணி கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல்முறையாகும். அதுவும் பலம் வாய்ந்த 41 முறை சாம்பியனான மும்பையை தோற்கடித்ததால் இந்த வெற்றியை அவர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். முதல் இன்னிங்சில் சதம் அடித்த மத்திய பிரதேச வீரர் சுபம் ஷர்மா ஆட்டநாயகன் விருதையும், 6 ஆட்டத்தில் 4 சதம் உள்பட 982 ரன்கள் குவித்த மும்பை வீரர் சர்ப்ராஸ்கான் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்த வெற்றி குறித்து மத்தியபிரதேச கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது;-
"எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அனைவரும் பரவசத்துடன் உணர்ச்சிமயமாக இருக்கிறோம். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் இது. மத்தியபிரதேச அணி ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்றதன் மூலம் காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட அணி தான் வெல்லும் என்ற நிலைமை போய் விட்டது.
கேப்டனாக இது தான் எனது முதல் ரஞ்சி தொடர். பயிற்சியாளர் சந்திரகாந்திடம் நிறைய கற்று இருக்கிறேன். இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார்.