வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பு... இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்
|இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. பின்னர் கேப்டவுனில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது. கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டி வெறும் 2 நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் இந்திய அணி வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பு முதல்தர பயிற்சி போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ,
இந்த தொடரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சந்தித்த தோல்வி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளில் முதல் போட்டியிலேயே நீங்கள் தோற்றால் பின்னர் தொடரை வெல்வது கடினமாகி விடும் என்பதை காண்பித்துள்ளது.
வெளிநாட்டு பயணங்களில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி திட்டமிடல் செய்வது அவசியமாகும். இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கு தயார்படுத்திக் கொள்ள இந்திய அணி முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும். இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.