< Back
கிரிக்கெட்
தோல்விக்கு கம்பீரின் முடிவு காரணமல்ல - அபிஷேக் நாயர் விளக்கம்
கிரிக்கெட்

தோல்விக்கு கம்பீரின் முடிவு காரணமல்ல - அபிஷேக் நாயர் விளக்கம்

தினத்தந்தி
|
6 Aug 2024 11:45 AM IST

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

கொழும்பு,

இந்தியா - இலங்கை இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் குறைந்த இலக்கை நிர்ணயித்த இலங்கை, அதை துரத்திய இந்தியாவை சுழல் பந்துவீச்சு மூலம் கட்டுப்படுத்தி அசத்தியது. ரோகித் தவிர அனைத்து பேட்ஸ்மேன்களுமே தடுமாறி வருகின்றனர்.

குறிப்பாக 2-வது போட்டியில் இலங்கை நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கம் கொடுத்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால் இந்தியா 208 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு அனுபவமற்ற வாஷிங்டன் சுந்தர், துபேவை 4, 5-வது வரிசையில் களமிறக்கிய புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அனுபவமிக்க ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரை பின்வரிசையில் களமிறக்கியதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இடது - வலது கை பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்ற கருதியே கம்பீர் அந்த முடிவை எடுத்ததாக துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் விளக்கம் அளித்துள்ளார். எனவே தோல்விக்கு அந்த முடிவு காரணமல்ல என்று தெரிவிக்கும் நாயர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"எந்த வகையான விளையாட்டிலும் நீங்கள் போட்டியின் வெவ்வேறு இடங்களில் விளையாடுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன். மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். அங்கேதான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள். சில நேரங்களில் 4, 5 அல்லது 6-வது வரிசை பேட்ஸ்மேன்கள் போட்டியின் முடிவில் முக்கிய பங்காற்றுவார்கள்.

ஆனால் இந்த போட்டியில் எடுத்த முடிவுகள் அனைத்தும் இலங்கையின் ஆப் மற்றும் லெக் ஸ்பின்னர்களை பார்த்து இடது - வலது கை ஜோடிகளை பயன்படுத்துவது பற்றியதாகும். எனவே எங்களுடைய சிந்தனை செயல்முறைகள் சரியானதே. இருப்பினும் அது வேலை செய்யாதபோது இது போன்ற கேள்விகள் எழுவது சகஜம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரில் விளையாடுவது சரியான முடிவு என்றே நான் நம்புகிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்