< Back
கிரிக்கெட்
கெய்க்வாட் அரைசதம்: பஞ்சாப் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சென்னை
கிரிக்கெட்

கெய்க்வாட் அரைசதம்: பஞ்சாப் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சென்னை

தினத்தந்தி
|
1 May 2024 9:28 PM IST

சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 62 ரன்கள் அடித்தார்.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரகானே 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

துபே ஏமாற்றம்:

அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே இந்த ஆட்டத்தில் ஏமாற்றினார். சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மிடில் ஓவர்களில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சென்னையை வெகுவாக கட்டுப்படுத்தினர். பின்னர் களமிறங்கிய ஜடேஜாவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கெய்க்வாட் நிலைத்து விளையாடினார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்து கெய்க்வாட் - சமீர் ரிஸ்வி சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் சமீர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த பிறகும் தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி 11 பந்துகளில் 14 ரன்கள் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். நடப்பு சீசனில் தோனி ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும்.

20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கெய்க்வாட் 62 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரார் மற்றும் ராகுல் சஹார் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி பஞ்சாப் விளையாட உள்ளது.

மேலும் செய்திகள்