சிறந்த 5 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்த இலங்கை முன்னாள் வீரர்... 2 இந்தியர்களுக்கு இடம்
|உலக கிரிக்கெட்டில் தற்சமயத்தில் தமக்கு பிடித்த சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை ஹெராத் தேர்வு செய்துள்ளார்.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணியின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுவர் ரங்கனா ஹெராத். முதல் தர கிரிக்கெட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 433 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இலங்கையின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.
குறிப்பாக 2014 டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் 3.3 ஓவர்களில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அந்த வகையில் இலங்கை டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் தற்சமயத்தில் தமக்கு பிடித்த சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை ஹெராத் தேர்வு செய்துள்ளார். அதில் முதலாவதாக இந்தியாவின் ரவிச்சந்திரன் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஆகியோர் தமக்கு மிகவும் பிடித்த ஸ்பின்னர்கள் என்று அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-"சுழற்பந்து வீச்சாளர்கள் என்று பார்க்கும்போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லயன் ஆகியோரை பிடிக்கும். அதேபோல தென் ஆப்பிரிக்காவில் இருந்து கேசவ் மகாராஜ். இந்திய வீரர் குல்தீப் யாதவ் பந்து வீசுவதை நான் எப்போதும் ஆர்வமாக பார்ப்பேன். இலங்கை அணியிலிருந்து கண்டிப்பாக பிரபத் ஜெயசூர்யாவை பிடிக்கும். எனவே பிடித்த சிறந்த சுழற்ப்ந்து வீச்சாளர்கள் என்று வரும்போது அவர்களின் பெயர்கள்தான் எனது மனதிற்குள் வரும்" என்று கூறினார்.