தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல கிரிக்கெட் நடுவர் சாலை விபத்தில் மரணம்
|இவர் 100 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் நடுவராக செயல்பட்ட இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றவர்.
கேப் டவுன்,
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல நடுவர் ரூடி கோர்ட்சன் சாலை விபத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 73. தென்னாப்பிரிக்காவின் ரிவர்டேல் என்ற பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் கோர்ட்ஸனுடன் மேலும் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் நண்பர்களுடன் கோர்ட்சன் கோல்ப் விளையாடிவிட்டு கேப் டவுனில் இருந்து நெல்சன் மண்டேலா விரிகுடாவில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 1992 இல் அவரை முழுநேர நடுவராக நியமித்தது. கோர்ட்சன் 1992 இல், இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது முதல் முறையாக நடுவராக பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றார். 43 வயதில், போர்ட் எலிசபெத்தில் நடந்த தொடக்க டெஸ்டில் கோர்ட்சன் நடுவராக இருந்தார்.
அதன்பிறகு பல முக்கிய போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ள இவர் 100 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் நடுவராக செயல்பட்ட இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றவர். கோர்ட்சன் 2003 மற்றும் 2007 உலகக் கோப்பைகளின் இறுதிப் போட்டிகளிலும் மூன்றாவது நடுவராகப் பணியாற்றி உள்ளார். 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றார்.