இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் நியமனம்
|2026 டி20 உலகக் கோப்பை வரை சனத் ஜெயசூர்யா பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் தலைமை பயிற்சியாளர் இல்லாமல் விளையாடி வந்தது. இதனால் தற்காலிக தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இவரது பயிற்சியின் கீழ் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் இலங்கை சிறப்பாக செயல்பட்டது. இவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி 27 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அக்டோபர் 13-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்த தொடரில் இருந்து ஜெயசூர்யா புதிய பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை வரை இவர் பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.