நியூசிலாந்து முன்னாள் வீரருக்கு அமெரிக்க அணியில் இடம்
|அமெரிக்க அணியில் நியூசிலாந்து முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார்.
நியூயார்க்,
கனடா கிரிக்கெட் அணி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. அமெரிக்கா- கனடா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 7-ந்தேதி ஹூஸ்டனில் நடக்கிறது. இந்த தொடருக்கான அமெரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
மோனக் பட்டேல் தலைமையிலான அந்த அணியில் நியூசிலாந்தை முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். ஆண்டர்சன் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்தவர். ஒருநாள் போட்டியில் அதிவேக சதமாக ஓராண்டுக்கு இச்சாதனை நீடித்தது. நியூசிலாந்து அணிக்காக 13 டெஸ்ட், 49 ஒரு நாள் மற்றும் 31 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பின்னர் நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்து விட்டு, அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த அவர் அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடி இப்போது அமெரிக்க அணிக்கு தேர்வாகியுள்ளார். 6 ஆண்டுக்கு பிறகு அவர் சர்வதேச போட்டிக்கு இன்னொரு நாட்டு அணிக்காக விளையாட உள்ளார். இதன் மூலம் அவர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணிக்காக விளையாடுவது உறுதியாகி விட்டது.