ரிஷப் பண்ட்-ஐ சந்தித்து நலம் விசாரித்த இந்திய முன்னாள் வீரர்கள்...!
|இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கினார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
இதனை தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை முன்னேறி வந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு ஆண்டு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து எந்த வித கிரிக்கெட்டும் ஆடாமல் இருந்து வருகிறார். மேலும், ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி உள்ளார்.
இந்த நிலையில், ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் ஆகியோர் சந்தித்துள்ளனர். இது தொடர்பாக அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரெய்னா,
சகோதரத்துவம் தான் எல்லாமே...குடும்பம் தான் நம் இதயம்...எங்கள் சகோதரர் ரிஷப் பண்ட் மிக சிறந்த மற்றும் மிக விரைவாக குணமடைய வாழ்த்துகிறோம்...குடும்பம், வாழ்க்கை, சகோதரத்துவம், நேரம், நம்பிக்கையுடன் இருங்கள் சகோதரரே...உங்களுடன் நாங்கள் எப்போதும் இருக்கிறோம்...நீ பீனிக்ஸ் பறவை போல் உயரப் பறப்பாய்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.