< Back
கிரிக்கெட்
தலைமை பயிற்சியாளரான கம்பீர் மீது இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி
கிரிக்கெட்

தலைமை பயிற்சியாளரான கம்பீர் மீது இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி

தினத்தந்தி
|
9 Aug 2024 12:58 PM IST

ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போன்ற முன்னாள் பயிற்சியாளர்கள் முக்கியமற்ற தொடர்களில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்ததாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை,

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 0 (3 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் கடந்த 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

முன்னதாக இந்த தொடரில் ரோகித், விராட் ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க முடிவெடுத்தது. ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீர் அவர்களை இத்தொடரில் விளையாட வைத்தார்.

இந்நிலையில் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போன்ற முன்னாள் பயிற்சியாளர்கள் இது போன்ற முக்கியமற்ற தொடரில் சீனியர்களுக்கு ஓய்வு கொடுத்து வருங்காலத்துக்கு தேவையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் கவுதம் கம்பீர் யாராக இருந்தாலும் விளையாடியாக வேண்டும் என்ற வலுக்கட்டாயத்தை ரோகித், விராட் கோலி போன்ற சீனியர்கள் மீது திணித்துள்ளதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "வருங்காலத்தை நோக்கிய திட்டமும் பாதையும் என்ன? ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி இருந்தபோது அது நன்றாக தெரிந்தது. குறிப்பாக விரைவில் உலகக்கோப்பை இல்லாத சூழ்நிலைகளில் ஜிம்பாப்வே, இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக நடைபெற்ற முக்கியமற்ற தொடர்களை அவர்கள் சிறப்பானதாக பார்க்கவில்லை. அதனாலேயே அத்தொடர்களில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

2 ஐசிசி தொடர்களுக்கு மத்தியில் முக்கியமான தொடர் நடைபெறவில்லையெனில் அவர்கள் சீனியர்கள் ஓய்வெடுக்கட்டும் என்று சொன்னார்கள். அவர்கள் புதிய வீரர்களை முயற்சித்தனர். ஆனால் இங்கே அது நடக்கவில்லை. டி20 உலகக்கோப்பையில் விளையாடிய ரோகித், விராட் ஆகியோர் சாம்பியன்ஸ் டிராபி வருவதால் நிச்சயம் விளையாடியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அடுத்ததாக இந்தியா 2025 பிப்ரவரி மாதத்தில்தான் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

எனவே இந்த இலங்கை தொடரில் நடந்த எதையுமே அணி நிர்வாகம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. இங்கே நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளவும் போவதில்லை. எனவே இத்தொடரில் விராட், ரோகித் விளையாடாமல் போயிருந்தாலும் அது சாம்பியன்ஸ் டிராபி தேர்வில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் கம்பீர் வந்ததும் நீங்கள் ஓய்வெடுக்க முடியாது பிட்டாக இருந்தால் கண்டிப்பாக விளையாட வர வேண்டும் என்று அறிவித்துள்ளார்" என கூறினார்.

மேலும் செய்திகள்