இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் நிர்வாகி காலமானார் - தலைவர்கள் இரங்கல்
|ராஞ்சியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டதில் அமிதாப் சவுத்ரியின் முயற்சி முக்கியமானதாகும்.
ராஞ்சி,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலாளரும், ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவருமான அமிதாப் சவுத்ரி (வயது 62) மாரடைப்பு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் ஜார்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணை செயலாளர் மற்றும் இந்திய அணியின் நிர்வாக மேலாளராகவும் இருந்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தை சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டியினர் நிர்வகித்த போது அவர் பொறுப்பு செயலாளராக இருந்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.
ராஞ்சியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டதில் அவரது முயற்சி முக்கியமானதாகும். அமிதாப் சவுத்ரி மறைவுக்கு ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.