< Back
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணிக்கு எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்...!
கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்...!

தினத்தந்தி
|
16 Jan 2024 7:44 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடருக்கு பின் சொந்த மண்ணில் இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காத இந்தியா தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறது.

மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20போல அதிரடியாக விளையாடி இங்கிலாந்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே 2012-ல் நடந்ததுபோல் இம்முறையும் இந்தியாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து இத்தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் முதல் நாளிலிருந்தே பந்து சுழலும் அளவுக்கு பிட்சுகளை இந்தியா தயாரித்தால் அது அவர்களுக்கே எதிராக அமையலாம் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் எச்சரித்துள்ளார். மறுபுறம் தாறுமாறாக சுழலக்கூடிய பிட்சுகள் இருந்தால் அது இங்கிலாந்துக்கு லாட்டரியாக அமையும் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

'ஒருவேளை நான் இந்திய அணி நிர்வாகத்தில் இருந்தால் ஓரளவு சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய நல்ல பிட்சுகளை கேட்பேன். ஒருவேளை அவர்கள் அதிகமாக சுழலும் பிட்சுகளை கேட்டால் அது எங்களுக்கு லாட்டரிபோல் அமைந்துவிடும். ஏனெனில் அந்த சூழ்நிலைகளில் இங்கிலாந்தும் தங்களுடைய ஸ்பின்னர்களை ஆட்டத்திற்கு கொண்டு வரும்.

இங்கிலாந்து பேட்டிங் செய்யும் விதத்திற்கு இந்தியாவின் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கண்டு பயந்து விட மாட்டார்கள். கடந்த சுற்றுப்பயணத்தைப்போல இம்முறையும் இங்கிலாந்து விளையாடினால் ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் தங்களுடைய மைதான பராமரிப்பாளர்களிடம் இன்னும் அதிகமாக சுழலக்கூடிய பிட்சுகளை கொடுக்குமாறு கேட்பார்கள்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்