< Back
கிரிக்கெட்
இந்திய வீரர் பும்ராவை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
கிரிக்கெட்

இந்திய வீரர் பும்ராவை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

தினத்தந்தி
|
4 Feb 2024 8:33 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

லண்டன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 15.5 ஓவர்கள் வீசியிருந்த பும்ரா வெறும் 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக ஜோ ரூட், ஒல்லி போப், பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்திய விதம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான அலெஸ்டர் குக் பும்ராவை பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்;-' கண்மூடி திறப்பதற்குள் பும்ரா தனி வீரராக இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை திருப்பி விட்டார். இங்கிலாந்து மிகச்சிறப்பாக இன்னிங்சை ஆரம்பித்திருந்தாலும் மிடில் ஆர்டரில் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டரை தனி ஆளாக அவரே காலி செய்து விட்டார்.

என்னுடைய கரியரிலும் நான் அவருக்கு எதிராக விளையாடி இருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட பவுலிங்கை அப்போது அவர் வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால் தற்போது பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவரது பவுலிங் ஸ்டைல் மற்றும் பந்துவீசும் ஆங்கிள் என அனைத்துமே பேட்ஸ்மன்களுக்கு மிக கடினமாக உள்ளது. அதனால்தான் அவர் இவ்வளவு ஒரு வெற்றிகரமான பந்துவீச்சாளராக திகழ்கிறார்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்