< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்காக விளையாட விராட் கோலி மாதிரி பிட்னஸ் மட்டும் போதாது - கவுதம் கம்பீர்
கிரிக்கெட்

இந்தியாவுக்காக விளையாட விராட் கோலி மாதிரி பிட்னஸ் மட்டும் போதாது - கவுதம் கம்பீர்

தினத்தந்தி
|
15 Jun 2024 6:46 PM IST

பிட்னஸ் மட்டும் வைத்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படக்கூடாது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நவீன கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு தற்போது பிட்னஸ் ஒரு அளவுகோலாக பார்க்கப்படுகிறது. முந்தைய காலங்களில் ஒரு சில வீரர்களே பிட்னசை கடைபிடித்தனர். ஆனால் தற்போது அனைத்து அணிகளிலும் ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியிலும் இப்போதெல்லாம் பிட்னசுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலி கேப்டனாக வந்ததும் பிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலையை உருவாக்கினார். அதை சோதிப்பதற்காக யோ யோ டெஸ்ட் எனும் கடினமான சோதனை முறையும் விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனவே இப்போதெல்லாம் அந்த தேர்வில் தேர்ச்சியாகும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அது போக பிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக சொல்லும் அளவுக்கு விராட் கோலி தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறார். அது பேட்டிங் மற்றும் பீல்டிங் துறையில் விராட் கோலி சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிட்னஸ் மட்டும் வைத்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படக்கூடாது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஒருவரின் பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்க்க வேண்டுமே தவிர யோ யோ டெஸ்டில் எவ்வளவு மதிப்பெண் எடுக்கிறார் என்பதை பார்க்கக் கூடாது என்று கம்பீர் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "பிட்னஸ் என்பது ஒரு காரணியாக இருக்க வேண்டும். அதே சமயம் சோதனையில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிட்டாக இருக்கிறீர்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பிட்னஸ் என்பது உடற்பயிற்சியாளரை பொறுத்தது. அவர் நீங்கள் பிட்டாக இருக்கிறார் என்று நினைத்தால் போதுமானது. ஏனெனில் சிலர் உடலளவில் ஒழுங்காக இருப்பதால் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையை தூக்குவார்கள்.

எனவே நீங்கள் யோ யோ டெஸ்டில் தேர்ச்சியாகாதவரை தேர்வு செய்யாமல் போனால் அது சரியான வழியல்ல. நீங்கள் வீரர்களை அவர்களுடைய பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வீரர்களின் பிட்னஸ் லெவலை சரியாக பார்த்துக் கொள்வது உடற்பயிற்சியாளரின் வேலை. எனவே யோ யோ தேர்வில் தேர்ச்சியாகவில்லை என்ற காரணத்திற்காக ஒருவரை நீங்கள் தேர்வு செய்யாமல் போனால் அது நியாயமற்றதாகும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்