146 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்
|146 வருடங்களில் முதல் முறையாக 27 வயது பாகிஸ்தான் வீரர் டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.
கொழும்பு,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க நாளில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது அப்துல்லா ஷபிக் (87 ரன்), பாபர் அசாம் (28 ரன்) களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் கேப்டன் பாபர் அசாம் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சவுத் ஷக்கில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 57 ரன்களில் வெளியேறினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சவுத் ஷக்கில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் அவர் புதிய சாதனை படைத்தார். இதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்று பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
முன்னதாக அவர் முதல் டெஸ்டில் 76 ரன்களும், இரண்டாவது டெஸ்டில் 63 மற்றும் 94 ரன்களும், மூன்றாவது டெஸ்டில் 53 ரன்களும், நான்காவது டெஸ்டில் 55 ரன்களும், ஐந்தாவது டெஸ்டில் 125 ரன்களும், ஆறாவது டெஸ்டில் 208 ரன்களும், ஏழாவது டெஸ்டில் 53 ரன்களும் எடுத்து புதிய சாதனையை அவர் படைத்தார்.
பின்னர் 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 563 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அப்துல்லா ஷபீக் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் சல்மான் 132 ரன்களும், முகமது ரிஸ்வான் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டுகளும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
நாளை 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.