முதலாவது டெஸ்ட்: அட்கின்சன் அபார பந்துவீச்சு... வெஸ்ட் இண்டீஸ் 121 ரன்களில் ஆல் அவுட்
|இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சனும், விக்கெட் கீப்பர் ஜாமி சுமித்தும் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர்.
இதில்'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீசை, இங்கிலாந்து புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் நிலைகுலைய செய்தார். அவரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 41.4 ஓவர்களில் 121 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மிக்கைல் லூயிஸ் 27 ரன் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் 12 ஓவர்களில் 5 மெய்டனுடன் 45 ரன் மட்டுமே வழங்கி 7 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். அறிமுக டெஸ்டிலேயே இங்கிலாந்து பவுலர் ஒருவர் 7 மற்றும் அதற்கு மேல் விக்கெட் வீழ்த்துவது இது 7-வது முறையாகும். இந்த டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. இது அவரது 701-வது விக்கெட்டாகும்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் அடித்து 68 ரன் முன்னிலை பெற்றுள்ளது. ஜோ ரூட் 15 ரன்களுடனும், ஹாரி புரூக் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.