முதல் டி20 போட்டி: இங்கிலாந்து அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
|முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி.
கராச்சி,
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிகளும் மற்ற நாட்டு அணிகளுடன் இறுதிகட்ட போட்டிகளில் மோதுகின்றன.
அந்த வகையில் 7 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இஅதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாபர் ஆசம், விக்கெட் கீப்பர் முகமுது ரிஸ்வான் ஆகியோர் களம் இறங்கினர்.
சிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விகெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தனர். பாபர் ஆசம் 31 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹைதர் அலி 11 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஷான் மசூத் 7 ரன்களுக்கும், அதிரடியாக ஆடிய ரிஸ்வான் 68 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து 5வது விக்கெட்டுக்கு இப்திகார் அகமது, முகமது நவாஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் நவாஸ் வந்த வேகத்திலேயே 4 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து குஷ்தில் ஷா களம் புகுந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் அடித்தது. அந்த அணி தரப்பில் குஷ்தில் ஷா 5 ரன்னுடனும், உஸ்மான் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் லுக் வுட் 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும், சாம் கர்ரன், மொயீன் அலி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட உள்ளது.