முதல் டி20 போட்டி: இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதல்
|இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
பல்லகலே,
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலாவது டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லகலேவில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
கடந்த மாதம் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்றதும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேயில் நடந்த டி20 தொடரை இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. உலக சாம்பியனான இந்தியா தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் தயாராகியுள்ளது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாவுகம், கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் இலங்கை அணியும் புதிய கேப்டனான சரித் அசலங்கா தலைமையில் களம் இறங்க உள்ளது. மொத்தத்தில் தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.