முதல் டி20 போட்டி; ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி
|4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது
தம்புள்ளா,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா 67 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 3 விக்கெட், நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் இப்ராஹிம் ஷத்ரான் 67 ரன்கள் எடுத்தார்.
கடைசிஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி 6 ரன்கள் மட்டுமே சேர்த்தது.இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் மதீஷா பதிரனா 4 விக்கெட் வீழ்த்தினார்.