< Back
கிரிக்கெட்
முதல் டி20 போட்டி; கடைசி பந்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற இலங்கை...!

Image Courtesy: @OfficialSLC

கிரிக்கெட்

முதல் டி20 போட்டி; கடைசி பந்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற இலங்கை...!

தினத்தந்தி
|
15 Jan 2024 6:52 AM IST

இலங்கையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட்டது.

கொழும்பு,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 62 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. இலங்கை அணியில் நிசாங்கா 2 ரன், குசல் மெண்டிஸ் 17 ரன், குசல் பெரேரா 17 ரன், சதீரா சமரவிக்ரமா 9 ரன், அசலங்கா 16 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் இலங்கையின் வெற்றிக்கு 6 பந்தில் 14 ரன் தேவைப்பட்டது. நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற மேத்யூஸ் கடைசி ஓவரில் அவுட் ஆக ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் வெற்றிக்கு 1 பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட துஷ்மந்தா சமீரா 2 ரன் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற இலங்கை தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்