முதல் டி20 போட்டி; ஹோல்டர் அதிரடி வீண் - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
|ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஹோபர்ட்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹோபர்ட்டில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வார்னர் மற்றும் இங்கிலிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இங்கிலிஸ் 39 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய மிட்செல் மார்ஷ் 16 ரன், மேக்ஸ்வெல் 10 ரன், ஸ்டோய்னிஸ் 9 ரன் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பிரண்டன் கிங் மற்றும் ஜான்சர் சார்லஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கிங் அரைசதம் அடித்து அசத்தினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சார்லஸ் 42 ரன்னிலும், கிங் 53 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய பூரன் 18 ரன், பவல் 14 ரன், ஹோப் 16 ரன், ரசல் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி வெற்றிக்கு போராடிய ஹோல்டர் 15 பந்தில் 34 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதையடுத்து 11 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.