முதல் டி20 போட்டி; ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு...இலங்கை 160 ரன்களில் ஆல் அவுட்
|இலங்கை அணி தரப்பில் அதிரடியாக ஆடிய ஹசரங்கா அரைசதம் அடித்து அசத்தினார்.
தம்புள்ளா,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.
டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் நிசாங்கா 6 ரன், மெண்டிஸ் 10 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய தனஞ்செயா டி சில்வா 24 ரன்னிலும், சரித் அசலங்கா 3 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 55 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சதீரா சமரவிக்ரமா மற்றும் வனிந்து ஹசரங்கா இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் சமரவிக்ரமா 25 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஹசரங்கா அரைசதம் அடித்த நிலையில் 67 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா 67 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 3 விக்கெட், நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆட உள்ளது.