< Back
கிரிக்கெட்
முதல் டி20 போட்டி: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்...!

Image Courtesy: @ACBofficials

கிரிக்கெட்

முதல் டி20 போட்டி: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்...!

தினத்தந்தி
|
25 March 2023 8:19 AM IST

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெறுகிறது.

ஷார்ஜா,

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பாகிஸ்தானின் முன்னணி வீரர்கள் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியை ஷதாப் கான் வழிநடத்துகிறார். இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்படிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் சைம் அயூப், தயப் தாஹிர், இமாத் வாசிம், ஷதாப் கான் ஆகிய 4 பேரை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர்.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி, முஜீப், நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 93 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் புகுந்த ஆப்கானிஸ்தான் 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

அந்த அணி தரப்பில் நபி 38 ரன் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்