முதல் டி20; மார்ஷ், டிம் டேவிட் அதிரடி.. கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
|ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 215 ரன்கள் குவித்தது.
வெலிங்டன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.
இதன்படி நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் அரை சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 32 ரன்களிலும், ஹெட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் தனது பங்குக்கு 11 பந்துகளில் 25 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதனால் ஆஸ்திரேலிய அணி இலக்கை நோக்கி முன்னேறியது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்படும் நிலையில், அந்த ஓவரை டிம் சவுதி வீசினார். அதில் முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் வந்த நிலையில், கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. அதனை எதிர்கொண்ட டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை கடைசி பந்தில் திரில் வெற்றி பெற வைத்தார். மிட்செல் மார்ஷ் 72 (44 பந்துகள்) ரன்களுடனும், டிம் டேவிட் 31 (10 பந்துகள்) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சான்ட்னர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.